January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“முந்தைய அரசாங்கம் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் படி இந்தியாவுடன் இணைந்து செயற்பட வேண்டியுள்ளது”

கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பில் இலங்கையின் முன்னாள் துறைமுகத் துறை அமைச்சர் சாகல ரத்நாயக்க செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி இலங்கை செயற்பட வேண்டும் என இந்தியா எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

களுத்துறை மாவட்டத்தின் வலல்லாவிட்ட பிரதேசத்தில் நடைபெற்ற “கிராமத்துடனான உரையாடல்” நிகழ்ச்சியில் உரையாற்றும் போதே ஜனாதிபதி  இதனை தெரிவித்தார்.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பில் தற்போது சர்ச்சை எழுந்துள்ளதாகவும் ஜனாதிபதி இதன் போது குறிப்பிட்டார்.

தான் ஜனாதிபதியாக இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த போது, முந்தைய ஜனாதிபதியின் முன்னிலையில் அமைச்சர் சாகல ரத்நாயக்க கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தம்மிடம் பேசியதாகவும் கோட்டாபய ராஜபக்‌ஷ இன்றைய நிகழ்வில் தெரிவித்தார்.

கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இலங்கை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என எதிர்பார்ப்பதாக இந்தியப் பிரதமர் கூறிய போது, அதற்கான மாற்று யோசனையை தான் முன்வைத்ததாகவும் ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

பழைய ஒப்பந்த்தின்படி செயற்பட்டால் நாடு கடன் சுமையில் தள்ளப்படும் என்பதால், முதலீட்டு அடிப்படையில் இந்தியாவின் பங்களிப்பு அமைய வேண்டும் மோடியிடம் விளக்கியதாகவும் ஜனாதிபதி  குறிப்பிட்டார்.

கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்குவது தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதாகவும், தம்மை ஆட்சிக்கு கொண்டுவர உழைத்த “பௌத்தத் துறவிகளும் இந்தத் திட்டத்திற்க்கு எதிராக குரல் எழுப்பியுள்ளார்கள். இதைப் பற்றி பேச அவர்களுக்கு உரிமை உண்டு. எனவே நான் அவர்களுக்கு விளக்கம் அளித்துள்ளேன்” என்றும் கூறினார் ஜனாதிபதி.