இலங்கையில் தமிழ் மக்களுக்கு சர்வஜன வாக்கெடுப்பொன்று தேவை என்று ஐநா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவுக்கு எடுத்துச் சொல்ல இதுவே சிறந்த தருணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் கடந்த 1436 நாட்களாக சுழற்சி முறையில் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் சாகும் வரையான உண்ணாவிரதம் இருந்தவர்களை 2017 ஜனவரி 26 ஆம் திகதி அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் ருவான் விஜயவர்த்தன தலையிட்டு, 14 நாட்களுக்குள் தீர்வு வழங்குவதாகக் கூறினாலும், இதுவரையில் தீர்வு கிடைக்கவில்லை என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.
சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்டத்தை இடைநிறுத்தி, அலரி மாளிகைக்கு அழைத்து மக்களை ஏமாற்றி இன்றுடன் நான்கு ஆண்டுகளாகின்றதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் குழந்தைகளை எங்களிடம் கொண்டு வாருங்கள், அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யவும், பயங்கரவாத தடைச் சட்டத்தை அகற்றுங்கள் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இலங்கையில் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்காததன் காரணமாகவே, தாம் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவை அழைக்க முடிவு செய்ததாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ் மக்களுக்கு பாதுகாப்பான மற்றும் நம்பிக்கையான அரசியல் தீர்வொன்றே தேவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.