November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘நிபுணர் குழுவின் அறிக்கைக்கு அமைய ஜனாஸாக்களை அடக்கம் செய்யலாம்’: பேராசிரியர் திஸ்ஸ விதாரண

இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யலாம் என்ற நிபுணர் குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்தாமல், காலம் தாழ்த்துவது தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று வைரஸ் தொடர்பான விசேட நிபுணர், பாராளுமன்ற உறுப்பினர், பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.

சோசலிச மக்கள் கட்சி கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

விசேட வைரஸ் நிபுணர்களின் அறிக்கையை அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ள குழுவுக்குச் சமர்ப்பிப்பதில் எவ்வித பயனும் இல்லை என்றும் அறிக்கையை ஆராயுமளவுக்கு அந்த குழுவில் வைரஸ் தொடர்பான நிபுணர்கள் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கொரோனாவால் மரணிப்பவர்களை அடக்கம் செய்வதா இல்லையா என்ற பிரச்சினையை ஏற்படுத்தி, ஒரு சமூகத்தின் மத நம்பிக்கை அகௌரவப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கம் இந்த விடயத்தை தொடர்ந்தும் இழுத்தடிக்காமல், கொரோனா தொற்றால் மரணிப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கான சுகாதார வழிகாட்டலொன்றை அறிமுகப்படுத்தி, அதற்கான அனுமதியை வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.