July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

எல்லை தாண்டும் இந்திய மீனவர்கள் விவகாரத்தில் தீர்வுகளை முன்வைக்க இலங்கையில் குழு நியமனம்

இலங்கைக் கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய சட்ட விரோத மீன்பிடி நடவடிக்கைளுக்கு நிரந்தர தீர்வு காண்பதற்காக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் மூவர் அடங்கிய குழுவென்று நியமிக்கப்பட்டுள்ளது.

உயர் அதிகாரிகளைக் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ள அந்தக் குழு, கடற்றொழில் அமைச்சு மற்றும் கடற்றொழில் திணைக்களத்தின் அதிகாரிகள், மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள், கடலோர காவற் படை ஆகிய தரப்பினருடன் கலந்துரையாடி பிரச்சினைக்கு தீர்வு காணப்பது தொடர்பான தமது பரிந்துரைகளை கடற்றொழில் அமைச்சருக்கு சமர்பிக்கவுள்ளது.

இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய சட்ட விரோதச் செய்ற்பாடுகளினால் இலங்கை மீனவர்கள் பாதிப்புக்களை எதிர்கொள்வதுடன், இலங்கையின் கடல் வளமும் அழிவடைந்து வருகின்றதாக கூறப்படுகின்றது.

இதனால், இந்திய மீனவர்களின் சட்ட விரோதச் செயற்பாடுகளை உடனடியாக நிறுத்துமாறு இலங்கை மீனவர்களினால் தொடர்ச்சியான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருவதுடன், போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இலங்கை கடற்பரப்பினுள் நுழைகின்ற இந்திய மீனவர்களை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளில் இலங்கை கடற் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நடவடிக்கையின் போது நான்கு இந்திய மீனவர்கள் உயிரிழந்த சம்பவமொன்று சில தினங்களுக்கு முன்னர் பதிவாகியுள்ளது.

இவ்வாறான சூழலில், குறித்த எல்லை தாண்டிய செயற்பாடுகளை நிரந்தரமாக நிறுத்துவதனை நோக்கமாகக் கொண்டு கடற்றொழில் அமைச்சரினால் குறித்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.