July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘தமிழ் மொழியை தகைமையாகக் கருதி பொலிஸாரை இணைத்துக்கொள்வது அடிப்படைவாதிகளுக்கு சாதகமாக அமையும்’

தமிழ் மொழியை விசேட தகைமையாகக் கருதி 150 சட்டத்தரணிகளை பொலிஸ் சேவையில் இணைத்துக்கொள்வது அடிப்படைவாதிகளுக்கு சாதகமாக அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசத்தைப் பாதுகாக்கும் தேசிய அமைப்பின் தலைவர் எல்லே குணவங்ச தேரர் 12 பேரின் கையொப்பத்துடன் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொலிஸ் சேவைக்கு 150 சட்டத்தரணிகளை இணைத்துக்கொள்ளும் நீதி அமைச்சர் மொஹமட் அலி சப்ரியின் தீர்மானத்துக்கு தேசத்தைப் பாதுகாக்கும் தேசிய அமைப்பு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

தமிழ் மொழியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது விசேட தகைமை எனக் குறிப்பிடப்பட்டுள்ளமையானது, இஸ்லாமிய அடிப்படைவாதத்துக்கு சார்பாக அமையும் என்பதையும் எல்லே குணவங்ச தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

‘முஸ்லிம்களின் சனத் தொகை அதிகரித்த வண்ணம் உள்ளது. சட்டத்துறையிலும் முஸ்லிம் சமூகத்தினர் அதிகளவில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பொலிஸ் பரிசோதகர் பதவிக்கு 150 சட்டத்தரணிகளை இணைக்க அமைச்சர் அலி சப்ரி முன்வைத்திருக்கும் யோசனை அடிப்படைவாதிகளுக்கு சாதகமாகும்’ என்றும் குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் உள்ள பாரம்பரிய முஸ்லிம்களுக்கு எதிராக தாம் செயற்படவில்லை என்றும் சில அரசியல்வாதிகள் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை வலுப்படுத்த முனைகின்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்மொழிகளில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாக இருந்தாலும், ஒரு மொழியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிப்பது அரசியலமைப்புக்கு முரணாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.