
இலங்கையில் முஸ்லிம் மக்களின் உரிமைகளுக்காகவும் அபிலாஷைகளுக்காகவும் ஆட்சியில் உள்ள ராஜபக்ஷ அரசுடன் பேச்சுகளை முன்னெடுப்பதற்கு தமது கட்சி தயாராகவே உள்ளதாக எதிரணியின் பங்காளிக் கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர் ஹாபீஸ் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.
சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 5 ஆசனங்களை வென்றது.
மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைக் கொண்டுள்ள ராஜபக்ஷ அரசுடன் இணைய வேண்டும் என்று முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்குள் கருத்துக்கள் வலுப்பதாக அண்மைக் காலங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்த நிலையிலேயே அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாணசபையின் முன்னாள் முதல்வருமான நஸீர் அஹமட் ஊடகங்களுக்கு தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.”தற்போதைய தேசிய அரசியல் களம் மிகவும் மாறுபட்டதாக உள்ளது.
அதனை நாம் சரியாகக் கையாள வேண்டிய நிலையில் உள்ளோம். அரசுக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை உள்ள நிலையில் எமது சமூகத்தின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டியதும் முஸ்லிம்களின் அபிலாஷைகளைப் பெற்றுக்கொடுக்க வேண்டியதும் மிகவும் முக்கிய விடயமாகின்றது.
ஆகவே, அந்த விடயங்கள் தொடர்பாக நாம் யாருடனும் பேச்சுகளை மேற்கொள்வதற்குத் தயாராகவே உள்ளோம். குறிப்பாக முஸ்லிம்களின் அபிலாஷைகளைப் பெற்றுக்கொடுப்பதற்காக தற்போதுள்ள ராஜபக்ஷ ஆட்சியாளர்களுடன் பேச்சுகளை மேற்கொள்வதற்கு நாம் தயாராகவே இருக்கின்றோம்.
அதேநேரம், அரசு முன்னெடுக்கும் நல்ல விடயங்களுக்கு எமது ஆதரவையும் தெரிவிப்பததோடு எமது சமூகத்துக்குப் பாதகமான விடயங்களை எதிர்ப்பதற்குப் பின்னிற்கவும் போவதில்லை. ஜனநாயகக் கட்டமைப்பான எமது கட்சியில் வெவ்வேறு நிலைப்பாடுகள் காணப்படலாம்.
ஆனால், எமக்கு ஆணை வழங்கும் மக்களின் நிலைப்பாடுகள், கட்சியின் பெரும்பான்மை அங்கீகார தீர்மானங்களுக்கு அமைவாகவே அனைத்துச் செயற்பாடுகளையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மேற்கொள்ளும்” – என்றார் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட்.