November 25, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொழும்புக்கு வெளியே கொரோனா தொற்றுப் பரவல் அதிகரிப்பு: இலங்கையின் இன்றைய நிலவரம்

இலங்கையில் இன்றைய தினத்தில் 787 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 56,863 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்தவர்களில் 633 பேர் இன்றைய தினத்தில் குணமடைந்துள்ளதாக கொவிட் தடுப்புக்கான செயலணி தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து இதுவரை 48,617 பேர் குணமடைந்துள்ளதுடன், 7,968 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இரண்டு மரணங்கள் பதிவு

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று பதிவாகிய உயிரிழப்புகளுக்கமைய நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 278 ஆக உயர்வடைந்துள்ளது.

கிழக்கில் மரண எண்ணிக்கை 6 ஆக உயர்வு

மட்டக்களப்பு கோட்டமுனை, மூர் வீதியில் ஒருவாரத்துக்கு முன்னர் கொரோனாவால் இறந்த 82 வயது முதியவரின் 75 வயது மனைவி இன்று கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.

காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் இந்த மரணம் பதிவாகியுள்ளது.

இதன்படி கிழக்கு மாகாணத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

பசறையில் 10 மாணவர்களுக்கு தொற்று

பதுளை – பசறை பகுதியில் பாடசாலையொன்றின் 10 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

12 மற்றும் 13 ஆம் தரங்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்கே தொற்று உறுதியாகியுள்ளது.

எதிர்வரும் 4 ஆம் திகதி கொழும்பில் நடக்கவுள்ள சுதந்திரத் தின நிகழ்வில் குறித்த பாடசாலை மாணவர்களும் கலந்துக்கொள்ள நிலையில் மாணவர்களுக்கு நடத்தப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளின் ஊடாக முதலில் இரண்டு மாணவர்களுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, அவர்களுடன் நெருங்கி பழகிய 80 மாணவர்களுக்கு பிசிஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

இதில் மேலும் 8 மாணவர்களுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

கொழும்புக்கு வெளியே தீவிரமடையும் கொரோனா

கொழும்பில் நாளாந்தம் அடையாளம் காணப்படும் தொற்றாளர் எண்ணிக்கையில் குறைவு ஏற்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் தற்போது கொழும்புக்கு வெளியிலேயே அதிகமான தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதாக சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.