July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படவுள்ள நிலக்கரியினால் மின்சார சபைக்கு 1800 மில்லியன் ரூபாய் நட்டம்’

அதிக விலையில் நிலக்கரிகளை கொள்வனவு செய்வதன் மூலமாக இலங்கை மின்சார சபைக்கு 1800 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்படப் போவதாகவும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

அவசர கால நிலைமைகளில் ஊழல் இடம்பெறுவதை தவிர்க்க  கேள்விமனுக்கோரல் அடிப்படையில் அவசர கேள்விமனுக்கோரலை பெற்றுக்கொள்ள நல்லாட்சி அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது என்றார்.

எனினும் ராஜபக்‌ஷ அரசாங்கம் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் இலங்கை மின்சார சபையில் பாரிய ஊழலை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், கேள்விமனுக்கோரலில் பாரிய ஊழல் இடம்பெற்றுவருவதாகவும் அவர் தெரிவித்தார்.

அவசர நிலைமைகளில் 60 டொலர் பெறுமதியில் பெறப்படும் ஒரு டொன் நிலக்கரியை 90 டொலர்கள் கொடுத்து கொள்வனவு செய்யப்படவுள்ளது, இதன் மூலமாக ஒரு டொன் நிலக்கரியில் 30 டொலர் கொள்ளையடிக்கவுள்ளதாக தெரிவித்த அவர் இவ்வாறு மூன்று இலட்சம் டொன் நிலக்கரியை அரசங்கம் இறக்குமதி செய்யுமானால் அதன் மூலமாக 1800 மில்லியன் ரூபாய் இலங்கை மின்சார சபைக்கு நட்டம் ஏற்படவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதே போன்று 2008-2013 ஆம் ஆண்டுகளில் சட்ட விரோதமாக நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்ட போதும் தமது ஆட்சியில் அதனை நிறுத்த நடவடிக்கை எடுத்ததன் விளைவாக தனது அமைச்சு பறிக்கப்பட்டதாகவும் சம்பிக்க ரணவக்க எம்.பி இதன் போது குறிப்பிட்டார்.

அத்துடன் தற்போதைய அரசாங்கம் சீனிக்கான வரியை குறைத்து அதில் 10 பில்லியன் நட்டத்தை ஏற்படுத்தியுள்ளனர், தேங்காய் எண்ணெய்க்கான வரி குறைக்கப்பட்டதனால் பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு சிகெரட் உள்ளிட்ட சகல துறைகளிலும் இன்று ஊழல் இடம்பெற்று வருகின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.