இலங்கையின் மத்திய மாகாண நுவரெலியா மாவட்டத்துக்கு உட்பட்ட நானுஓயா, உடரதல்ல தோட்ட தொழிலாளர்கள் கடந்த 10 நாட்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
தோட்ட நிர்வாகத்தின் செயற்பாடுகளுக்கு கண்டித்தும் , கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்துமே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ‘கெலனிவெளி பிளான்டேசன்’ நிர்வாகத்துக்கு உட்பட்ட குறித்த தோட்டத்தில் சுமார் 275 தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர்.
எனினும், இவர்களுக்கான தொழில்சார் உரிமைகளையும், சலுகைகளையும் தோட்டத்துரை (முகாமையாளர்) திட்டமிட்ட அடிப்படையில் தடுத்து வருவதாக தொழிலாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். ஓராண்டு காலமாக அவரின் அடக்குமுறை தொடர்வதாகவும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்தம் தமக்கு நீதி கோரியுமே தாம் இந்த போராட்டத்தில் ஈடுபடுவதாக தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 12 ஆம் திகதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் இவர்கள் இன்றைய தினம் அங்கு ஆர்ப்பாட்டம் ஒன்றையும் முன்னெடுத்திருந்தனர். பாடசாலைக்கு பிள்ளைகளை பாதுகாப்பாக அழைத்து செல்வதற்காக நியமிக்கப்பட்டிருந்த கங்காணிமாருக்கு நாட் சம்பளம் வழங்கப்பட்டு வந்த நிலையில், இவ்வாறு நியமிக்கப்பட்டிருந்த இரு கங்காணிகளை நீக்கிவிட்டு, குறைந்த சம்பளத்துக்கு இருவரை தோட்டதுரை நியமித்துள்ளதாக, அவர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
இதேவேளை 8 மணிநேரம் வேலைசெய்தாலும் அரை நாள் பெயரே போடப்படுகின்றது. அத்துடன் கடும் மழையிலும் 18 கிலோ பறிக்குமாறு அழுத்தம் கொடுக்கப்படுகின்றதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். தோட்டதுரையின் செயற்பாடே இதற்கு காரணம். தொழிற்சாலையும் மூடப்பட்டுள்ளது.
இதனால் வெளி தோட்டத்துக்கே கொழுந்து அனுப்படுகின்றது. ஓய்வூதியம் பெற்றவர்களை அழைத்து, கொழுந்து உள்ள மலைகளில் கொழுந்து கொய்து அவர்களுக்கு குறைந்த ஊதியம் வழங்கப்படுவதுடன், தோட்டத்தில் வேலைசெய்யும் எம்மை கொழுந்து இல்லாத மலைகளுக்கு சென்று பறிக்குமாறு அழுத்தம் கொடுக்கப்படுகின்றது.
இவ்வாறாக எமது உழைப்பு சுரண்டப்படுகின்றது. இதனாலேயே தாம் போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்றனர்.