November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்து வடமராட்சி மீனவர்கள் கதவடைப்பு போராட்டத்திற்கு தீர்மானம்

File Photo

‘கறுப்புக் கொடிகளை படகுகளில் கட்டியவாறு மீன்பிடிக்க வருவோம்’ என்று இந்திய மீனவர்கள் அறிவித்துள்ளமையை கண்டித்து, வடமராட்சி வடக்கு கடற்தொழிலாளர்கள் சமாசம் வடக்கு தழுவிய கதவடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு கோருகிறது.

அதற்கான ஒன்றுகூடல் வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர்கள் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தில் இன்று இடம்பெற்ற கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது எல்லை தாண்டி மீன்பிடியில் இந்திய மீனவர்கள் தொடர்ச்சியாக ஈடுபடுவதாலேயே வடக்கு கடலில் மீனவர்களுக்கிடையே பிரச்சனைகள் ஏற்படுகின்றதுடன் வடக்கு மீனவர்கள் மீது இந்திய மீனவர்களே பல தாக்குதல்களை மேற்கொள்கின்றதாக வடக்கு கடற்தொழிலாளர்கள் சுட்டிக்காட்டினர்.

மேலும் கடல் எல்லையைத் தாண்டும் மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து வருகிறது. இந்த கைது நடவடிக்கை வரவேற்க்கத்தக்கது. இது தொடர வேண்டும் என்பது எமது தொடர்சியான கோரிக்கை எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

இலங்கை கடற்பரப்பில் அண்மைய நாளில் இடம்பெற்ற படகு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு எமது அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

அதேவேளை எமது கடற்பரப்பிற்குள் நுழைய வேண்டாம் என, மீண்டும் மீண்டும் கூறுகிறோம் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதேவேளை சில அசம்பாவிதங்களை வைத்து எமது கடற்பரப்புக்குள் நுழைந்து எமது வளங்களை அழிக்க அனுமதிக்க முடியாது.

கறுப்புக் கொடிகளை படகில் கட்டிக் கொண்டு மீன்பிடிக்க எமது எல்லைக்குள் வருவோம் என இந்திய மீனவர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை அடாவடித்தனமாகும். அதனை நாம் அனுமதிக்க முடியாது. எனவும் வடக்கு கடற்றொழிலாளர்கள் குறிப்பிட்டனர்.