வடக்கு மாகாணத்திலிருந்து இடம் பெயர்ந்த மக்களின் வாக்குரிமை மீறல் தொடர்பாக மன்னார் மாவட்ட இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பிராந்திய அலுவலகத்தில் இன்றைய தினம் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளதாக மன்னார் பிரதேச சபையின் தலைவர் எஸ்.எச்.எம்.முஜாஹிர் தெரிவித்தார்.
1981 ஆம் ஆண்டு 44 ஆம் இலக்க தேருனர்கள் பதிவு சட்டத்தில் 12(7) ஆம் உப பிரிவிற்கிணங்க குறித்த ஒரு வாக்காளர் ஒன்றிற்கு மேற்பட்ட சாதாரண வதிவிடங்களைக் கொண்டிருக்கின்ற விடத்து அவரது வாக்கினை பதிவு செய்வதற்கான தகைமை வாய்ந்த முகவரி எது என தீர்மானிக்கும் உரிமை குறித்த வாக்காளருக்கே உரியது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்வாறு இரு இடங்களிலும் ஒருவர் விண்ணப்பித்திருந்தால் எந்த இடத்தை தெரிவு செய்யப் போகிறீர்கள் என்று வாக்காளரிடம் கேட்டு ஒரு முகவரியை ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும் குறித்த தேருநர் பதிவு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கிராம அலுவலர், மன்னார் பிரதேச செயலாளர் மற்றும் உதவி தேர்தல்கள் ஆணையாளர் ஆகியோரினால் இவ்வாறு இடம் பெயர்ந்த மக்களின் வாக்களிக்கும் உரிமையை இல்லாமலாக்கி அவர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் முறையிட்டுள்ளதாக பிரதேச சபை தவிசாளர் தெரிவித்துள்ளார்.
எனவே இந்த விடயம் தொடர்பில் அரசுடனும், தேர்தல்கள் ஆணையாளருடனும் கதைத்து பாதிக்கப்பட்ட மக்களின் வாக்களிக்கும் உரிமையை மீட்டுத்தருவதற்கு துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மன்னார் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக மன்னார் பிரதேச சபையின் தலைவர் முஜாஹிர் மேலும் தெரிவித்தார்.