January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நெடுங்கேணி வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினருக்கு விளக்கமறியல்!

பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த வவுனியா வடக்கு நெடுங்கேணி வெடுக்குநாறி மலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் நிர்வாகத்தினர் மற்றும் பூசகரை விளக்கமறியலில் வைக்க வவுனியா நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இன்றையதினம் வழக்கு தவணைக்காக ஆஜராகிய நிலையிலேயே அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

வெடுக்குநாரி மலையில் வழிபாடுகளை மேற்கொள்வதற்கு தொல்பொருள் திணைக்களமும், நெடுங்கேணி பொலிசாரும் பல்வேறு தடைகளை ஏற்படுத்தி வந்ததுடன் தொல்பொருள் சார்ந்த சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் வவுனியா நீதவான் நீதிமன்றில் வழக்கினையும் தாக்கல் செய்திருந்தனர்.

குறித்த வழக்கு வவுனியா நீதிமன்றில் கடந்தவருடம் ஒக்டோபர் மாதம் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது நிர்வாகத்தினர் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன் நவம்பர் 6 ஆம் திகதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

எனினும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வழக்கு விசாரணை நடத்தப்படாமல் தை மாதத்திற்கு தவணை இடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தொல்பொருட்திணைக்களத்தினால் நீதி மன்றில் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டதையடுத்து டிசம்பர் மாதம் 11 ஆம் திகதிக்கு வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

வழக்கின் திகதி மாற்றம் குறித்து தமக்கு தெரியப்படுத்தவில்லை என்று தெரிவித்த ஆலய நிர்வாகத்தினர் நீதி மன்றிற்கு சமூகமளித்திருக்கவில்லை.

இதேவேளை, அன்றையதினம் அவர்களது பிணையும் ரத்தாகியிருந்தது. இதனால் ஆலய நிர்வாகத்தினருக்கு எதிராக நீதி மன்றால் அன்றையதினம் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே இன்றையதினம் வழக்கு தவணைக்காக ஆஜராகிய ஆலயத்தின் நிர்வாகத்தினர் மற்றும் பூசகர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.