இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும், பொறுப்புக்கூறல் விடயங்கள் குறித்தும் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்களின் அறிக்கைகளை மீண்டும் பரிசீலிப்பதற்கான மூவரடங்கிய ஆணைக்குழு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அமைக்கப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்ற நீதியரசர் எச்.எம்.எம் நவாஸ் தலைமையில், ஓய்வு பெற்ற பொலிஸ்மா அதிபர் சந்திரா பெர்ணான்டோ மற்றும் ஓய்வுபெற்ற மாவட்ட செயலாளர் நிமல் அபேசிறி ஆகியோர் அந்த ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக விசேட வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் பெப்ரவரி, மார்ச் மாதங்களில் ஜெனிவாவில் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் இலங்கை மாற்று நடவடிக்கைகளை கையாள்வதற்கு தீர்மானித்துள்ள நிலையிலேயே இந்த ஆணைக்குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 20 ஆம் திகதி முதல் இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த வாரத்தில் இந்த ஆணைக்குழுவை அமைப்பதற்கு ஜனாதிபதி தீர்மானித்திருந்ததுடன், அது தொடர்பாக அமைச்சரவையில் தீர்மானம் எடுக்கப்பட்டு அதற்கான உறுப்பினர்கள் தற்போது நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஆணைக்குழுவினர் கற்றுக்கொண்ட பாடங்களும், நல்லிணக்கத்திற்குமான ஆணைக்குழுவின் அறிக்கை , காணாமல் போனோர் தொடர்பான ஆராயவென அமைக்கப்பட்ட பரணகம ஆணைக்குழு அறிக்கை உள்ளிட்ட கடந்த காலங்களில் அமைக்கப்பட்ட பல்வேறு ஆணைக்குழுவின் அறிக்கைகளை ஆராயவுள்ளனர்.
அதன்படி அடுத்து கூடவுள்ள ஜெனிவா கூட்டத் தொடருக்கு முன்னர் இவர்கள் தமது அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளனர்.
அந்த அறிக்கையை அடிப்படையாக கொண்டு ஜெனிவாவில் இலங்கை சார்பில் சமர்ப்பிக்கப்படும் அறிக்கை தயாரிக்கப்படவுள்ளது.