November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

திலீபன்: “ஜனாதிபதியின் கீழ் உள்ள காவல்துறை தான் தடையுத்தரவைப் பெற்றது”- சிவஞானம் (காணொளி)

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அரசியல் தீர்மானம் ஒன்றை எடுத்து திலீபன் நினைவேந்தலை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று அவருக்கு அண்மையில் தமிழ்க் கட்சிகள் அனுப்பிய கடிதம் தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் அதன் தலைவர்களில் ஒருவரான சிவிகே சிவஞானம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் கீழுள்ள காவல்துறையே யாழ். நீதிமன்றத்தில் திலீபன் நினைவேந்தலுக்கு தடையுத்தரவை பெற்றுள்ளது என்று கூறிய சிவஞானம், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை பொலிஸார் மீளபெறப்பெறும் சந்தர்ப்பத்தில் தமிழ் மக்கள் திலீபனின் நினைவேந்தலை நடத்த முடியும் என்றும் தெரிவித்தார்.

திலீபன் நினைவேந்தல் தொடர்பில் ஒத்த கருத்தில் உள்ள தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து திலீபனின் நினைவேந்தலுக்கு உள்ள தடையை நீக்கக் கோரி ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் கடிதம் அனுப்பியிருந்தன.

நீதிமன்ற விடயத்தில் தலையீடு?

அந்தக் கடிதம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல, ஜனாதிபதி எந்த விதத்திலும் நீதிமன்ற விடயத்தில் தலையிட முடியாது என்று கூறியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் முகமாக வடக்கு மாகாணசபையின் தவிசாளர் சிவஞானம் யாழ்ப்பாணத்தில் இன்று நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது, இந்த அரசாங்கம் பொதுவான அரசியல் தீர்மானம் ஒன்றினை எடுத்து பொலிஸார் மூலம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை மீளபெறுவதை எந்த விதத்திலும் ஜனாதிபதி நீதிமன்ற விடயத்தில் தலையிடுவதாக கருத முடியாது என்றார்.