November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகள் மூன்று பி.சி.ஆர். பரிசோதனையின் பின்னரே நாடு முழுவதும் பயணம் செய்ய முடியும்’

விமான நிலையங்கள் உத்தியோகபூர்வமாக திறக்கப்பட்டுள்ள நிலையில்,இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு மூன்று தடவைகள் பி.சி.ஆர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டதன் பின்னரே நாடு முழுவதும் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என சுற்றுலாத்துறை  அமைச்சின் செயலாளர் எஸ்.ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

நாட்டுக்குள் வரும் சுற்றுலாப்பயணிகள் முதலில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர்.பின்னர் தனிமைப்படுத்தப்பட்ட ஹோட்டலில் பி.சி.ஆர் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.அதனைத்தொடர்ந்து மேலும் ஐந்து முதல் ஏழு நாட்களுக்குள் அவர்கள் மற்றொரு பி.சி.ஆர் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

14 நாட்கள் முடிந்த பிறகு, மூன்றாவது பி.சி.ஆர் சோதனை மேற்கொள்ளப்படும்.இந்த சோதனை முடிவில் எதிர்மறை முடிவு வரும்பட்சத்தில் மாத்திரமே சுற்றுலாப் பயணிகள் நாடு முழுவதும் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். மேலும், சுற்றுலாப்பயணிகளால் உள்ளூர் மக்களுக்கு கொரோனா வைரஸ் பரப்புவதற்கான ஆபத்து இல்லை என்பதை உறுதிப்படுத்த வழிகாட்டுதல்கள் வகுக்கப்பட்டுள்ளது என்றும் ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

மேலும், நாளொன்றுக்கு பத்து விமானங்கள் நாட்டிற்குள் அனுமதிக்கப்படவுள்ளது.நாட்டிற்கு வர விரும்பும் இலங்கையர்களுக்கு ஒரு விமானத்தில் 75 ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.அந்த அடிப்படையில் நாளொன்றுக்கு 750 இலங்கையர்கள் நாடு திரும்ப முடியும் என்றும் ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். .