November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘சுற்றுலாத்துறைக்காக நாடு திறக்கப்படுவதால் கொரோனா பரவும் அச்சுறுத்தல் இல்லை’

சுற்றுலாத்துறைக்காக தற்போது விமான நிலையங்கள் திறக்கப்பட்டாலும், கொரோனா பரவல் அச்சுறுத்தல் எதுவுமில்லை என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

எனினும், சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்குள் வருவதில் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் சுகாதார நிலைமைகள் எவ்வாறு உள்ளது என்பதை அடுத்த இரண்டு வாரங்களுக்கு ஆராய உள்ளதுடன் அவசியமாயின் மாற்று நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

தற்போது வரையில் 35 விமான சேவைகளை இலங்கைக்கான பயணங்களை மேற்கொள்ள இணங்கியுள்ளனர். எனவே மீண்டும் இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்த இது நல்லதொரு வாய்ப்பாக அமைந்துள்ளதாகவே நாம் கருதுகிறோம் என்றார்.

இந்த ஆண்டில் மூன்று மில்லியன் சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் ஒரு நாளைக்கு சுமார் 2500 வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் வரக்கூடிய விதத்திலேயே ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

அதேபோல் சுற்றுலாப்பயணிகள் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையம் மற்றும் மத்தள விமான நிலையத்தின் ஊடாக நாட்டிற்குள் பிரவேசிக்க முடியும் என தெரிவித்த அவர் பயணிகள் தம்மை பதிவு செய்து கொள்வது தொடக்கம் மீண்டும் இந்த நாட்டில் இருந்து வெளியேறும் வரையில் “டிரவல்-பபிள்” திட்டத்திற்கு அமையவே செயற்பட முடியும் எனவும் சுட்டிக்காட்டினார்.