January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘வழிபாட்டு தலங்களில் உரிய சுகாதார நடை முறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும்’

வழிபாட்டு தலங்களில் மக்கள் உரிய சுகாதார நடை முறைகளை பின்பற்றி கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டிமேல் கேட்டுக்கொண்டுள்ளார்.

மன்னார் மாவட்டத்தில் பொறுப்பாக உள்ள மத தலைவர்களுடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலைத் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் உள்ள சகல வழிபாட்டு தலங்களிலும் மத கடமையில் ஈடுபடும் போது மக்கள் சுகாதார நடை முறைகளை பின் பற்ற வேண்டும் என்று கண்டிப்பான அறிவித்தலை வழங்கி உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

வழிபாட்டு தலங்களில் மக்கள் அதிகமாக ஒன்று கூடும் போது கொரோனா தொற்று அதிகரிப்பதற்கு சந்தர்ப்பங்கள் அதிகமாக உள்ளது என்றார்.

எனவே தற்போதைய கொரோனா சூழ்நிலையில் ஒவ்வொரு வழிபாட்டு தலங்களிலும் பின் பற்றப்படுகின்ற வழிபாட்டு முறைகளில் எவற்றை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்ற விடையங்களையும் மத தலைவர்களுக்கு தெரியப்படுத்தி உள்ளதாக அவர் தெரிவித்தார்.

இது குறித்து மத தலைவர்கள் தமது மதஸ்தலங்களுக்கு வருகைதரும் மக்களுக்கு தெரியப்படுத்த உள்ளதுடன் அவர்களின் பூரண ஒத்துழைப்பையும் வழங்க உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அத்தோடு மாவட்டத்தில் உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து ஒத்துழைப்பு வழங்கும் பட்சத்தில் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும் என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டிமேல் கேட்டுக்கொண்டுள்ளார்.

குறித்த கலந்துரையாடலில் மதத்தலைவர்கள், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் உற்பட அழைக்கப்பட்ட திணைக்கள அதிகாரிகள் கலந்துகொண்டனர்.