ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை பிரபல பாடசாலைகளுக்கு அனுமதிப்பதற்கான வெட்டுப் புள்ளிகளை குறைக்குமாறு வலியுறுத்தி கல்வி அமைச்சுக்கு முன்னால் இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
பாடசாலைகளை பாதுகாக்கும் மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் மாணவர்களின் பெற்றோர்களும், ஆசிரியர் மற்றும் மாணவர் சங்கங்களின் உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
2020 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை பிரபல பாடசாலைகளில் 6 ஆம் தரத்திற்கு அனுமதிப்பதற்கான வெட்டுப்புள்ளிகள் உயர்த்தப்பட்டுள்ளதால் எதிர்பார்ப்புடன் காத்திருந்த மாணவர்கள் ஏமாற்றமடைந்துள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.
ஆகவே பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு பிரபல பாடசாலைகளில் 6 ஆம் தரத்திற்கு இணைத்துக்கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரித்து, அனுமதிப்பதற்கான வெட்டுப் புள்ளிகளை குறைப்பதற்கு அதிகாரிகளினால் நடவடிக்கையெடுக்கப்பட வேண்டுமென்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.