July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இலங்கையில் கொரோனா கட்டுக்கடங்காமல் பரவியுள்ளது’: சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பினார் அமைச்சர் தயாசிறி

இலங்கையில் கொரோனா தொற்று கட்டுக்கடங்காமல் பரவியுள்ளதாகவும், பொது மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்த அமைச்சர், சிகிச்சைகளை நிறைவுசெய்துகொண்டு நேற்று வீடு திரும்பியுள்ளார்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றின் அனுபவங்களையும், அரசாங்கம் மற்றும் பொது மக்கள் கவனம் செலுத்த வேண்டிய விடயங்களையும் அமைச்சர் உத்தியோகப்பூர்வ முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார்.

அனைத்து நோயாளிகளையும் சுகாதார மையங்களுக்கு அனுப்பும் நிலையில் அரசாங்கம் இல்லை என்றும் பொதுமக்கள் பொறுப்பாக இருப்பதன் மூலமே கொரோனா தொற்றில் இருந்து பாதுகாப்புப் பெற முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகின்றதாகவும், காய்ச்சல், இருமல், சுவையின்மை போன்ற அறிகுறிகள் இருந்தால், குடும்ப உறுப்பினர்களை விட்டுவிலகி, சுய தனிமைப்படுத்தலில் இருப்பதே சிறந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் உள்ள 60 ஆயிரத்துக்கும் அதிகமான இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கும் போது, அவர்கள் அனைவருக்கும் அரச தனிமைப்படுத்தல் நிலையங்களை ஒதுக்குவது சிரமமான காரியம் என்றும் அவ்வாறானவர்களை வீடுகளில் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.