July 2, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கோட்டாபய அரசால் நீதி கிடைக்க வாய்ப்பில்லை; மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம்

தமது முடிவுகளை அடிக்கடி மாற்றியமைக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசின் செயற்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள், மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதற்கான நம்பிக்கையை இல்லாமல் செய்துள்ளது என்று மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் தெரிவித்துள்ளது.

நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான விடயம் மற்றும் தமக்கான கடமைகளை நிராகரித்தல் போன்ற தற்போதைய அரசின் நடவடிக்கைகளை மேற்கோளிட்டு அறிக்கையொன்றை குறித்த அமைப்பு வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், பத்து வழக்குகளை ஆராய்ந்து இலங்கையின் குற்றவியல் நீதி அமைப்பின் தோல்விகள் மற்றும் குறைபாடுகளை மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் அடையாளப்படுத்தியுள்ளது.

இந்த வழக்குகளில் பெரும்பாலானவற்றில், பாதிக்கப்பட்டவர்களும் அவர்களது குடும்பத்தினரும் ஒரு தசாப்தத்துக்கும் மேலாக நீதிக்காகக் காத்திருக்கின்றனர் எனவும் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதற்கிடையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை மற்றும் திருகோணமலையில் மாணவர் ஐவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி தவிர்க்கப்பட்டுள்ளது எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

ஆகவே, இந்த விடயத்தில் தற்போதைய அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட கட்டமைப்பு மற்றும் சட்ட சீர்திருத்தங்களுக்கான அவசர தேவையை மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

மேலும், இந்த நடவடிக்கை காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் இலங்கையின் குற்றவியல் நீதி அமைப்பு மூலம் எப்போதும் நீதி பெறுவதில் நம்பிக்கையை இழந்து வருகின்றனர் எனவும் குறித்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

எனவே, விரிவான மற்றும் உண்மையான சீர்திருத்தங்கள் மூலம் அவர்களின் கவலைகளை நிவர்த்தி செய்வது கட்டாயமாகும் எனவும் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.