January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘ராஜபக்சவினரை விரைவில் வீட்டுக்கு அனுப்புவோம்’

பதவி ஆசையில் – அதிகார வெறியில் அராஜக ஆட்சி நடத்தும் ராஜபக்சவினரை விரைவில் வீட்டுக்கு அனுப்புவோம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாட்டில் கடந்த 70 வருட காலத்தில் இடம்பெற்ற அனைத்து நன்மை, தீமைகளுக்கும் சேனாநாயக்க – கொத்தலாவல பரம்பரை, பண்டாரநாயக்க – ரத்வத்தே பரம்பரை, ஜயவர்தன – விக்கிரமசிங்க பரம்பரை மற்றும் 2005ஆம் ஆண்டின் பின்னர் ராஜபக்ச பரம்பரை ஆகிய நான்குமே பொறுப்பேற்க வேண்டும். அவற்றில் ராஜபக்ச குடும்பம் அதிகாரத்தை துறப்பதற்கு தயார் நிலையில் இல்லை என்பதுடன், சமுதாயத்தின் அனைத்துக் கட்டமைப்புகளையும் ஆள்வதற்கு முற்படுகின்றது.

எமது எதிர்கால சந்ததியினர் மத்தியில் பாரிய சமுதாய மாற்றமொன்றை ஏற்படுத்துவதற்கு நாம் முன்னின்று செயற்பட வேண்டும். தற்போது நாட்டை ஆட்சி செய்கின்ற, எதிர்காலத்தில் ஆட்சி செய்வதற்கு எதிர்பார்த்திருக்கும் ராஜபக்ச குடும்பத்துக்கு அந்த இயலுமை இல்லை என்பது அவர்களது கடந்தகாலச் செயற்பாடுகளின் மூலம் உறுதியாகியிருக்கிறது.

தற்போது நாடு முகங்கொடுத்திருக்கும் நெருக்கடி நிலைக்கு கடந்த 70 வருடங்களாக நாட்டை ஆட்சி செய்தவர்களே பொறுப்புக்கூற வேண்டும் என பரவலாகக் கூறப்படுகின்றது. எமது நாடு இலவசக்கல்வி, இலவச சுகாதார சேவை ஆகியவற்றில் சிறந்த இடத்தில் இருந்தாலும் பொருளாதாரத்தைப் பொறுத்தவரை அது சிறந்த இடத்தை அடையவில்லை.

இந்நிலையில் எமது எதிர்கால சந்ததியினருக்கு இரத்தம் தோயாத சமுதாயமொன்றைக் கையளிக்கும் பொறுப்பு எமக்கு உள்ளது. இதனை உருவாக்குவதற்கு எவ்வித இன, மத, அரசியல், கட்சி பேதங்களுமின்றி திறமையுடைய அனைவருக்கும் அழைப்பு விடுக்க வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.