July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இராணுவ பயிற்சி என்பது முடியாத காரியம்”

18 வயதிற்கு கூடிய அனைவருக்கும் இராணுவ பயிற்சி வழங்குவதற்காக  தற்போதைய அரசாங்கத்திற்கு 7500 கோடி ரூபாய்கள் செலவு செய்ய முடியுமா? என எதிர்க்கட்சி உறுப்பினர் சரத் பொன்சேகா இன்று பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

18 வயதிற்கு கூடிய அனைவருக்கும் இராணுவ பயிற்சி வழங்குவதாக அமைச்சர் வீரசேகர தெரிவித்திருந்தார்.

இவ்வாறு பயிற்சி வழங்கப்படுவோர் 18 – 26 வயதிற்கு இடைப்பட்டவர்கள் என வைத்துக்கொண்டாலும், இந்த வயதெல்லைக்குள் மூன்று அல்லது நான்கு மில்லியன் பேர் இருப்பார்கள் என பொன்சேகா சுட்டிக்காட்டினார்.

அத்துடன், இவர்களுக்கு ஆறுமாத கால பயிற்சி என்றாலும் கூட ஒரு நபருக்கு ஆறு மாதங்களுக்கு ஏழரை இலட்சம் ரூபாய்கள் செலவாகும் என தெரிவித்த அவர் ஒரு இலட்சம் பேருக்கு பயிற்சிகளை வழங்குவதென்றால் 75 பில்லியன் ரூபாய் செலவாகும் எனவும் குறிப்பிட்டார்.

இந்நிலையில், தற்போதைய அரசாங்கத்திற்கு 7500 கோடி ரூபாய்கள் செலவு செய்ய முடியுமா? என கேள்வி எழுப்பிய பொன்சேகா இவ்வாறான பொய்யான காரணிகளை கூறி மக்களை ஏமாற்ற வேண்டாம் எனவும் தெரிவித்தார்.

இதேவேளை எந்தவொரு சர்வதேச நாடும் எமது நாட்டில் சுயாதீனத்தில் தலையிட அனுமதிக்க முடியாது என அரசாங்கம் வீர வசனங்களைப் பேசிக்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வெளிநாட்டிற்குக் கொடுத்து மண்டியிடும் நிலைமை உருவாகப்போகின்றது எனவும் சரத் பொன்சேகா இதன் போது குறிப்பிட்டார்.