July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 55 ஆயிரத்தை கடந்தது: இலங்கையின் இன்றைய நிலவரம்

File Photo: Twitter/ Srilanka Red cross

இலங்கையில் இன்றைய தினத்தில் 768 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 55,189 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்தவர்களில் 621 பேர் இன்றைய தினத்தில் குணமடைந்துள்ளதாக கொவிட் தடுப்புக்கான செயலணி தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து இதுவரை 47,215 பேர் குணமடைந்துள்ளனர்.

ஒருவர் மரணம்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று பதிவாகிய உயிரிழப்புக்கமைய நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 274 ஆக உயர்வடைந்துள்ளது.

19 நாட்களில் வடக்கில் 351 தொற்றாளர்கள் 

2021 ஜனவரி முதலாம் திகதியில் இருந்து நேற்று வரையான 19 நாட்களில் வடக்கு மாகாணத்தில் 351 பேருக்கு, கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நேற்று வடக்கு மாகாணத்தில் 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதில் 45 பேர் வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவை சேர்ந்தவர்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இத்தோடு சேர்த்து வவுனியா நகர் பகுதியிலே ஏற்பட்ட தொற்று பரம்பலில் இதுவரைக்கும் 244 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கு மேலதிகமாக நேற்று யாழ்ப்பாண மாவட்டம் மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 5 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்கள் 5 பேரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களாகும். கொழும்பிலிருந்து வந்து தங்கியிருந்த இவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் மன்னார் பொது வைத்தியசாலை விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த இரண்டு பேருக்கு தொற்று உறுதிப்படுத்தட்டுள்ளது.

கடந்த 19 நாட்களில் வடக்கு மாகாணத்தின் வவுனியா மாவட்டத்தில் 234 பேருக்கும், மன்னார் மாவட்டத்தில் 70 பேருக்கும், யாழ்ப்பாணயில் 32 பேருக்கும், கிளிநொச்சியில் 10 பேருக்கும் மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 5 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.