நல்லாட்சி அரசாங்கத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் குறித்த விசாரணை அறிக்கைகள் விரைவில் வெளிவரவுள்ளதாகவும், ஊழல் ஒழிப்பு குழுவின் மோசடிகளை ஆராய ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நல்லாட்சி அரசாங்கத்தின் ஊழல் ஒழிப்பு குழுவின் 22 உறுப்பினர்களுக்கு எதிராக பாராளுமன்றத்திற்கு பரிந்துரைகளை பெற்றுக்கொடுக்கும் விதத்தில் குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அமையும் என்று இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் வழக்குத் தொடர சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாகவும் மத்திய வங்கி பிணைமுறி ஊழல் விசாரணைகளை துரிதப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோன்று, 2015- 2019 காலத்தில் இடம்பெற்ற அரசியல் பழிவாங்கல்கள் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் கண்காணிப்புகளை அமைச்சரவை அங்கீகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நல்லாட்சி அரசாங்கத்தின் ஊழல் ஒழிப்பு குழுவில் அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் அமைச்சர்களான மங்கள சமரவீர, சம்பிக்க ரனவக, ரவூப் ஹக்கீம், சரத் பொன்சேகா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான ஆர். சம்பந்தன், எம்.ஏ. சுமந்திரன், அனுரகுமார உட்பட 22 பேர் அங்கத்தவர்களாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.