முப்பது ஆண்டுகால யுத்தத்தில் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க அரசாங்கம் எந்தவித நடவடிக்கையும் முன்னெடுக்காது, அவர்களை தொடர்ந்தும் வறுமைக்கோட்டின் கீழ் வைத்திருக்கவே அரசாங்கம் முயற்சிக்கின்றது என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மக்கள் மீது தொடர்ந்தும் அடக்குமுறையை கையாளவும் அரசாங்கம் முயற்சிக்கின்றது எனவும் கஜேந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
இதேவேளை மக்களின் வாழ்வாதாரம் தொடர்பாக கவனம் செலுத்துவதை விடுத்து, வடக்கில் பௌத்த விகாரைகளை அமைத்தல், நில ஆக்கிரமிப்பு போன்ற விடயங்களுக்கே அரசாங்கம் முக்கியத்துவம் கொடுக்கின்றதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
வடக்கில் யுத்த காலகட்டத்தில் கூட தமிழர்கள் சென்று வழிபட்ட குருந்தூர் மலை பிரதேசம் தற்போது தொல்பொருள் திணைக்களம் ஆக்கிரமித்துள்ளதாகவும், இதனால் தைபொங்கல் தினத்தில் எமது தமிழர்கள் அங்கு செல்ல முடியாத நிலைமை உருவாகியதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏனைய மாவட்டங்களில் வாழும் மக்களுடன் போட்டிபோடக்கூடிய நிலைமையில் வடக்கு, கிழக்கு மக்களின் வாழ்க்கைத்தரம் இல்லை என்றும், இதனால் எமது மக்களை இலக்கு வைத்து நடத்தும் அடக்குமுறையை நிறுத்த வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் வலியுறுத்தியுள்ளார்.