வாழைச்சேனை கமநல சேவை திணைக்களத்திற்குட்பட்ட மக்கிளானை பள்ளிமடு விவசாய பிரிவில் காட்டு யானைகளின் வருகை அதிகரித்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
மக்கிளானை பள்ளிமடு விவசாய பிரிவில் தொடர்ச்சியாக யானைகளின் வருகையால் விவசாயிகள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதுடன், இரவு நேரங்களில் வயல் காவல் செய்வதில் உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
காட்டு யானைகள் பயிரிடப்பட்ட வயல் நிலங்கள், சோளம் மற்றும் கச்சான் போன்றவற்றை அழித்து நாசம் செய்வதுடன், வயல் காவலாளியின் குடிசைகளையும் துவம்சம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் இன்று சத்த வெடி மூலம் காட்டுப் பகுதிக்கு யானைகளைத் துரத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
எனினும், வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சென்றதும் யானைகள் மீண்டும் வயல் நிலங்களுக்கு வருகை தருவதாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
வங்கிக் கடன் பெற்று விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடும் தாம் யானைகளின் தொந்தரவால் விளைச்சலை இழப்பதாகவும், உரிய தீர்வுகள் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.