January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“குருந்தூர் மலை ஆகழ்வாராய்ச்சியில் யாழ். பல்கலை மாணவர்கள், பேராசிரியர்கள் இணைக்கப்பட வேண்டும்”

குருந்தூர் மலை தொல்பொருள் அகழ்வு ஆராய்ச்சிகளுக்கு யாழ். பல்கலைக்கழக மாணவர்கள், மற்றும் விரிவுரையாளர்களுக்கும் அனுமதி வழங்கவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

குருந்தூர் மலை ஆக்கிரமிப்பு தொடர்பாக இன்று பாராளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

குருந்தூர் மலை காடு என சுட்டிக்காட்டி 1933 ஆம் ஆண்டு வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது, ஆகவே இது தமிழர் பகுதி என்பது உறுதியாகின்றது என சுட்டிக்காட்டினார்.

மேலும் அங்கு சிவன் ஆலயமும் உள்ளது, இவ்வாறான நிலையில் இந்த பகுதியில் ஏற்கனவே விகாரை ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இறுதியாக நீதிமன்றத்தினால் தடை உத்தரவும் வழங்கப்பட்டுள்ளது என்பதையும் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்.

இவ்வாறான நிலையில் நீதிமன்ற தீர்ப்பையும் மீறி தொல்பொருள் ஆராய்ச்சி என்று கூறி ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றார்.

இதேவேளை இந்த ஆய்வுப்பணிகளில் பேராதனை பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் ஆய்வு மாணவர்கள் பங்குபற்ற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், யாழ் பல்கலைக்கழக மாணவர்களும் விரிவுரையாளர்களும் இந்த ஆய்வுகளில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட வேண்டும் என தாம் வலியுறுத்தியதாக அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக சம்பந்தன் அமைச்சர் விதுர விக்ரமநாயகவிடம் பேசியதையடுத்து இந்த ஆய்வுகளில் யாழ் பல்கலைக்கழகமும் அதன் விரிவுரையாளர்களும் இணைந்து கொள்ள முடியும் என குறிப்பிட்டார்.

எனினும் இது வார்த்தைகளுடன் நின்றுவிடாது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.