வடமராட்சி கடற்பரப்பில் அத்துமீறி தொழில் ஈடுபட்டுள்ள இந்திய மீனவர்கள் தமது வலைகளை அறுத்து அட்டூழியத்தில் ஈடுபட்டதாக சுப்பர்மடம் மீனவர் சங்கத் தலைவர் தே.தேவதாசன் தெரிவித்தார்.
பருத்தித்துறை சுப்பர்மடம் இறங்குதுறையிலிருந்து 15 கிலோ மீற்றர் தொலைவில் தொழிலுக்காக இன்று அதிகாலை படகில் சென்ற போதே இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அங்கு 4 படகுகளில் தொழிலில் ஈடுபட்டிருந்த இந்திய மீனவர்கள் தமது 20 வலைகளை அறுத்து எடுத்திருந்தனர் எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
பாதிக்கப்பட்ட மீனவர் வலைகளைத் தருமாறு கோரிய போதும் இந்திய மீனவர்கள் கற்களால் தனது படகைத் தாக்கியதுடன் அருகே வந்தால் தாக்குதல் நடத்துவதாக மிரட்டியதாகவும் அவர் கூறினார்.
அத்தோடு இந்திய மீனவர்கள் முகம் தெரியாதவாறு துணிகளைக் கட்டியிருந்ததுடன், கொட்டன்களை வைத்திருந்ததாகவும் பாதிக்கப்பட்ட மீனவர் மேலும் தெரிவித்தார்.
பல மணிநேரம் வலைகளைக் கேட்டுக் காத்திருந்த நிலையில் ஏமாற்றத்துடன் கரை திரும்பியுள்ள அவர் சுமார் 3 லட்சம் ரூபாய் பெறுமதியான வலைகளை இழந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இதேவேளை, குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மீனவரான சுப்பர்மடம் மீனவர் சங்கத் தலைவர் தே.தேவதாசன், பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யவுள்ளதாகத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.