மட்டக்களப்பு- பட்டிப்பளை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பிரதேசத்தில் கால்நடைகளுக்காக ஒதுக்கப்பட்ட மேய்ச்சல் தரை காணியை பெரும்பான்மை இன மக்கள் அத்துமீறி பிடிக்கின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கால்நடை பண்ணையாளர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசியல்வாதிகள் மற்றும் பண்ணையாளர்கள் பட்டிப்பளை பிரதேசத்தில் இருந்து பேரணியாக சென்று பிரதேச செயலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட கச்சக்கொடி சுவாமிமலை 135 கிராம சேவகர் பிரிவில் உள்ள பரிபாலன திணைக்களத்திற்கு சொந்தமான மணல் ஏற்றம், காத்தாடியார் சேனை, பொன்னாங்கண்ணி சேனை, பனையடிவெட்டை, மலையடிவெட்டவிச்சுகுளம் ஆகிய வன பிரதேச கால் நடைகளுக்கான மேய்ச்சல் தரையை பண்ணையாளர்கள் பரம்பரை பரம்பரையாக பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் சில வருடங்களாக பெரும்பான்மை இன மக்கள் அத்துமீறி பயிர் செய்கையில் ஈடுபட்டுவருவதுடன், 1500 ஏக்கருக்கு அதிகமான காடுகளும் அழிக்கப்படுகின்றன.
இந்த மேய்ச்சல் தரை அபகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தே கால்நடை பண்ணையாளர்கள் அரசியல்வாதிகள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
இதேவேளை இந்த ஆர்ப்பாட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன், மற்றும் பட்டிப்பளை பிரதேச சபை தவிசாளர், போரதீவுப்பற்று பிரதேச சபை தவிசாளர் ஆகியோர் பிரதேச செயலாளரிடம் மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளனர்.