இலங்கையின் வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் மத மற்றும் கலாச்சார மரபுரிமைகளை ஒடுக்கும் வகையில் தொல்பொருள் ஆராய்ச்சி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, குருந்தூர் மலை விவகாரத்தில் தமிழ் மக்களின் மத உரிமைகள் ஒடுக்கப்படவில்லை என்று தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.
குருந்தூர் மலை தொல்பொருள் அகழ்வுப் பணிகள் தொடர்பில் ஊடகவியலாளர்களிடம் கருத்துரைக்கும்போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் குருந்தூர் மற்றும் மணலாறு- படலைக்கல்லு பகுதிகளில் பௌத்த விகாரைகளும் பௌத்த துறவிகள் வாழ்ந்தமைக்கான சான்றாதாரங்களும் கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்தே, தொல்லியல் திணைக்களம் அகழ்வாராய்ச்சி நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தில் வடக்கு மற்றும் கிழக்கு அரசியல்வாதிகள் தவறான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ் மக்களின் மதம் மற்றும் கலாசார அம்சங்களை ஒடுக்க வேண்டிய தேவை அரசாங்கத்துக்குக் கிடையாது என்றும் இந்தப் பிரதேசம் தொல்லியல் பகுதியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள காரணத்தினாலேயே ஆராய்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாத்திரமன்றி, அனைத்து மாகாணங்களிலும் வரலாற்றுச் சின்னங்கள் புதைந்துள்ளதாகவும், தேசிய மரபுரிமைகளைப் பாதுகாக்கும் பொறுப்பு நாட்டு மக்கள் அனைவருக்கும் உண்டு என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பௌத்த மத மரபுரிமைகளை மாத்திரம் பாதுகாப்பது தமது நோக்கமல்ல, அனைத்து இனத்தவர்களின் மரபுரிமைகளும் பாதுகாக்கப்படும் என்றும் இவ்விடயத்தில் இன, மத காரணிகளைக் கொண்டு செயற்பட முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பௌத்த விகாரைகளை நிறுவ தமிழ் மக்களின் காணிகள் அபகரிக்கப்படுகின்றன என்று தமிழ் அரசியல்வாதிகள் குறிப்பிடும் கருத்து முற்றிலும் தவறானதாகும் என்றும் விதுர விக்ரமநாயக்க குறிப்பிட்டுள்ளார்.