July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘தமிழ் மக்கள் மீதான ஆக்கிரமிப்பின் ஆரம்ப கட்டமே குருந்தூர் மலை அகழ்வாராய்ச்சி’

இலங்கையின் உயர்மட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானமொன்றிற்கு அமைவாகவே தொல்லியல் திணைக்களம் ஆராய்ச்சி என்ற போர்வையில் குருந்தூர் மலை ஆக்கிரமிப்பு சம்பவம் இடம்பெற்று வருவதாக வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், தமிழ் மக்கள் மீது ஆக்கிரமிப்பினை மேற்கொள்வதற்கான ஆரம்ப கட்டமாகவே குருந்தூர் மலை விடயத்தைப் பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

குருந்தூர் மலை என்பது ஒரு தமிழ்ப் பிரதேசம் என்பதோடு, தமிழ் மக்களால் ஐயனார் ஆலயம் பராமரிக்கப்பட்டு, வழிபட்டு வந்ததாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அகழ்வாராய்ச்சி செயற்பாட்டின் மூலம் முல்லைத்தீவு மண்ணில் பாரிய ஆக்கிரமிப்பொன்று நடைபெறுகின்றதாகவும், இந்த ஆக்கிரமிப்பில் இருந்து எப்படிப் பாதுகாப்பாக இருக்கப் போகின்றோம் என்பது கேள்விக் குறியாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மலையில் ஏறி என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்பதற்குக்கூட தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், வெளிப்படைத் தன்மையாக தொல்பொருள் ஆராய்ச்சிகள் இடம்பெறுவதில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.