May 25, 2025 9:43:25

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மன்னார் வாக்காளர் இடாப்பிலிருந்து 7727 பேர் நீக்கப்பட்டமை தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

மன்னார் வாக்காளர் இடாப்பிலிருந்து 7727 வாக்காளர்கள் நீக்கப்பட்டமை தொடர்பில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை மேற்கொண்டுள்ளார்.

இடம்பெயர்ந்து புத்தளத்தில் வாழ்ந்து வந்தவர்களுக்கு கொத்தணி வாக்களிப்பு முறையின் ஊடாக, மன்னார் மாவட்டத்தில் வாக்களிக்க தேர்தல் ஆணைக்குழு சந்தர்ப்பம் வழங்கியிருந்த நிலையில், அவர்களது வாக்காளர் பதிவை மன்னார் உதவித் தேர்தல் ஆணையாளர் திட்டமிட்டு, வாக்காளர் இடாப்பிலிருந்து நீக்கியுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

அவ்வாறு அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் வாக்காளர் பதிவுகளை மீளவும் அந்தந்த கிராமங்களில் பதிவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மீள்குடியேறிய பிரதேசங்களில் உரிய வசதிகள் கிடைத்தவுடன் மீண்டும் அங்கு செல்ல விருப்பத்துடன் இருக்கும் மக்களின் வாக்குப் பதிவுகளை பலவந்தமாக நீக்கியமை பாரதூரமான மனித உரிமை மீறலாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வாக்காளர் பதிவு நீக்கப்பட்டவர்களுக்கு இலங்கையில் எந்தவொரு பிரதேசத்திலும் தற்பொழுது வாக்குரிமை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பிரஜை ஒருவருக்கு வெவ்வேறு இடங்களில் வீடுகள் இருப்பதற்காக, சொந்த மாவட்டத்திலுள்ள வாக்காளர் இடாப்பை மாற்ற முடியாது என்பதையும் கொழும்பில் வசிக்கும் பிரதமர் மகிந்த தொடர்ந்தும் மெதமுலானையிலேயே வாக்களித்து வருகின்றதையும் அவர் ரிஷாட் சுட்டிக்காட்டியுள்ளார்.

மன்னார் பிரதேச சபையில் 2618 பேருக்கும் முசலி பிரதேச சபையில் 3452 பேருக்கும் மாந்தை மேற்கு பிரதேச சபையில் 1217 பேருக்கும் நானாட்டான் பிரதேச சபையில் 457 பேருக்கும் மன்னார் பிரதேச சபையில் 342 வாக்காளர்களுக்கும் சொந்த மாவட்டத்தில் வாக்களிக்க நடவடிக்கை எடுக்குமாறு ரிஷாட் பதியுதீனின் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.