January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘குருந்தூர் மலை அகழ்வுப் பணிகளில் துறைசார் தமிழ் ஆய்வாளர்களும் இணைத்துக்கொள்ளப்பட வேண்டும்’

குருந்தூர் மலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள தொல்பொருள் திணைக்களத்தின் அகழ்வாராய்ச்சிப் பணிகளில் துறைசார் தமிழர்களையும் இணைத்துக்கொள்ளுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க மற்றும் தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் ஆகியோருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

குருந்தூர் மலையில் உள்ள ஆதி சிவன் ஐயனார் கோவிலை தமிழ் மக்கள் பாரம்பரியமாக வழிப்பட்டு வந்த நிலையில், நேற்று ஆலயப் பகுதியில் தொல்லியல் சிதைவுகள் காணப்படுகின்றதாகக் கூறி, அகழ்வுப் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

குருந்தூர் மலையில் அகழ்வுப் பணிகள் சம்பிரதாயப்பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்ட நிகழ்வில் இந்துக் கடவுளின் அடையாளங்கள் அழிக்கப்பட்டிருந்ததையும் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தோடு, அகழ்வுப் பணியில் யாழ். பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் விரிவுரையாளர்களோ, யாழ். பிராந்திய தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களத்தின் ஆராய்ச்சி உதியோகத்தர்களோ உள்வாங்கப்படாமை குறித்து இராஜாங்க அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த ஆய்வுப் பணி வெளிப்படைத் தன்மையுடன் இருக்க வேண்டும் என்றும் யாழ். பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் பீடத்தினர் மற்றும் யாழ். பிராந்திய தொல்பொருள் திணைக்கள ஆராய்ச்சி உத்தியோகத்தர்களும் அகழ்வுப் பணியில் இணைத்துக்கொள்ளப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் சம்பந்தப்பட்ட இராஜாங்க அமைச்சருடனும், தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளருடனும் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.

இதன்போது, சார்ள்ஸ் எம்.பி. அனுப்பிய கடிதம் கிடைத்துள்ளதாகவும், யாழ். பல்கலைக்கழக தொல்பொருள் பீடத்தினரையும், யாழ். பிராந்திய தொல்பொருள் திணைக்கள ஆராய்ச்சி உத்தியோகத்தர்களையும் இணைத்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்துள்ளனர்.