Photo: Facebook/Kumanan
முல்லைத்தீவு குருந்தூர் மலையை பெளத்தமயமாக்க தொல்லியல் திணைக்களம் எடுக்கும் முயற்சியை உடனடியாக கைவிட வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
எமது தாயகத்தில் மிக மோசமான ஆக்கிரமிப்புகள் இடம்பெற்றுக்கொண்டுள்ளது, இதனால் தமிழ் மக்கள் மிகவும் கொதித்துப்போயுள்ளதுடன் அவர்களின் நிம்மதியும் கெட்டுப்போயுள்ளது.
இந்த நிலைமைமயில் எமது மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை அவசரமாக காணப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
குருந்தூர் மலையில் காட்டு மரங்கள் வெட்டப்பட்டு இராணுவத்தின் 51 ஆம் படையணியின் கொடிகள் பறக்கவிடப்பட்டதாகவும், அதன் பின்னர் அங்கு தொல்லியல் ஆய்வுகள் இடம்பெறுவதாக கூறப்பட்ட நிலையில் தற்போது அங்கு ஒரு புத்தர் சிலையொன்று வைக்கப்பட்டு பூஜை வழிபாடுகள் இடம்பெற்றுள்ளதாகவும் கஜேந்திரன் எம்.பி தெரிவித்துள்ளார்.
இந்த நிலம் தமிழர்களுக்கானதே, இங்கு தமிழர்கள் வாழ்ந்து வந்துள்ளனர். இங்கு தமிழர்கள் வழிபாடுகளில் ஈடுபட எந்த தடையும் இல்லை என்ற நீதிமன்ற கட்டளை விடுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், ஆனால் அங்கு தற்போது பெளத்த ஆக்கிரமிப்பு இடம்பெற்று வருகின்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் எல்லை மீள் நிர்ணயம் செய்து இந்த பகுதியை பெளத்த மயமாக்க எடுக்கும் முயற்சியை உடனடியாக கைவிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.