நீதிமன்ற அவமதிப்பு குற்றத்தில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவை பாராளுமன்றத்திற்கு வர அனுமதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார்.
ஏற்கனவே இவ்வாறான சந்தர்ப்பத்தில் பிரேமலால் ஜெயசேகர எம்பியை பாராளுமன்றத்திற்கு அழைத்துவர சபாநாயகர் அனுமதி வழங்கியதைப்போல ரஞ்சன் ராமநாயக்க எம்பியையும் பாராளுமன்றத்திற்கு அனுமதிக்கச் சபாநாயகர் தீர்மானம் எடுத்திருக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று விசேட கூற்றை முன்வைத்தே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.
ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற ஆசனம் ஆறு மாதத்தின் பின்னரே இரத்தாகும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அப்படியாயின் அவரை அழைத்து வர முடியும்.
அதேபோன்று அவரின் ஆசனம் இரத்தாவதற்கு எதிராக நடவடிக்கையெடுப்பது குறித்தும் நாம் சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொண்டுள்ளோம் என்றும் அரசியல் அமைப்பின் பிரகாரம் அவரின் ஆசனம் எந்த சந்தர்ப்பத்திலும் வெற்றிடமாகாது மற்றும் பறிபோகாது எனவும் சஜித் பிரேமதாஸ சுட்டிக்காட்டினார்.
இதேவேளை எதிர்க்கட்சி தலைவரின் கேள்விக்குப் பதில் அளித்த சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன, ரஞ்சன் ராமநாயக்க எம்பியை பாராளுமன்ற அமர்வுகளில் அனுமதிப்பதற்கு உடனடியாக தீர்மானம் ஒன்றினை தன்னால் வழங்க முடியாது என தெரிவித்தார்.
அத்துடன் இது குறித்து முறையான ஆலோசனைகளைப் பெற்று ஆராய்ந்து தீர்ப்பு ஒன்றினை வெளியிட மூன்று வாரகால அவகாசம் தனக்குத் தேவை எனவும் சபாநாயகர் சபையில் அறிவித்தார்.