January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“பேரினவாத நில ஆக்கிரமிப்புக்கு எதிராக தமிழ் அரசியல்வாதிகள் குரல் கொடுக்க வேண்டும்”

தமிழர்களின் மரபு வழி மண்ணான முல்லைத்தீவு, திருகோணமலை மற்றும் வவுனியா மாவட்டங்களில் தொடர்ந்து நிகழ்த்தப்பட்டு வரும் பேரினவாத ஆக்கிரமிப்புக்கு எதிராக, தமிழ் அரசியல்வாதிகள் அனைவரும் குரல் கொடுக்க வேண்டிய கூட்டுப்பொறுப்பை கொண்டிருக்கின்றார்கள் என்று தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் என்.சிறிகாந்தா தெரிவித்துள்ளார்.

குறூந்தூர் மலை விவகாரம் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் குருந்தூர் மலையில், பௌத்த விகாரை ஒன்றின் சிதைவுகளும் சிதிலங்களும் காணப்படுகின்றன என்ற கண்டுபிடிப்பு ஒன்றின் பேரில் அங்கிருந்த இந்து ஆலயத்தின் ஐயனார் சூலத்தை அகற்றி விட்டுள்ளனர்.

‘முல்லைத்தீவு மாவட்டத்தின் குருந்தூர் மலையில், பௌத்த விகாரை ஒன்றின் சிதைவுகள் காணப்படுகின்றன என்ற கண்டுபிடிப்பு ஒன்றின் பேரில் அங்கிருந்த இந்து ஆலயத்தின் ஐயனார் சூலத்தை அகற்றி விட்டு, கௌதம புத்தரின் சிலை ஒன்றை நிறுவியுள்ளனர்.

தொல்லியல் திணைக்களம் ஆரம்பித்திருக்கும் அகழ்வு ஆராய்ச்சி நடவடிக்கைகள், தமிழ் மக்களின் வரலாற்று வாழ்விடமாக அங்கீகரிக்கப்பட்ட வடக்கு- கிழக்கு மாகாணங்களில் தொடர்ந்து செயற்படுத்தப்பட்டு வரும் பௌத்த சிங்கள நில ஆதிக்க விஸ்தரிப்பு நிகழ்ச்சி நிரலின் இன்னுமோர் அம்சமாகும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

இராஜாங்க அமைச்சர் ஒருவர், பௌத்த மத அனுஷ்டானங்களோடு ஆரவாரமாக ஆரம்பித்து வைத்துள்ள இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கை, அரசாங்கத்தின் அதிகார அடாவடித்தனத்தின் அப்பட்டமான வெளிப்பாடு ஆகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஒருங்கினைக்கப்பட்டதும், தொடர்ச்சியானதுமான எதிர்ப்பு எமது மக்கள் மத்தியிலிருந்து எழ முடியுமானால், இந்த செயற்பாட்டை தோற்கடிக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இன, மத உரிமைகள் சம்பந்தப்பட்ட உணர்வுபூர்வமான இந்த விவகாரத்தில், தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் மௌனம் காக்க கூடாது எனவும் ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.