தமிழர்கள் இனியும் இந்த நாட்டின் சிங்களவர்களுடன் இணைந்து வாழ முடியுமா என்பதை அறிந்துகொள்ள வடக்கு – கிழக்கில் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றினை நடத்த சர்வதேச நாடுகள் முன்வர வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் இன்று பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, தானே யுத்தத்தை வென்றேன், நானே பிரபாகரனை கொன்று இழுத்து வந்தேன் என அண்மையில் கிழக்கில் ஒரு இடத்தில் கூறியுள்ள நிலையில், இந்த நாட்டின் மீது நடவடிக்கை எடுக்க வேறு என்ன சாட்சியங்கள் தேவை என அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த நாட்டில் இனியும் தமிழர்கள் சிங்களவர்கள் இணைந்து வாழ முடியாது என்பதற்கு அவரே சாட்சியாக உள்ளார். ஜனாதிபதிக்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பேசினால் அவரை கொலை செய்வேன் என கூறும் ஜனாதிபதியின் கீழ் சிங்களவர்களுக்கே இந்த நிலை என்றால் தமிழர்கள் இந்த நாட்டில் வாழ முடியுமா? எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
இவ்வாறான ஜனாதிபதியின் கீழ் இந்த நாட்டில் நீதி கிடைக்குமா? என தெரிவித்த அவர் இந்த நாட்டில் இனியும் தமிழர்கள் வாழ முடியுமா என்பதை அறிந்துகொள்ள வடக்கு கிழக்கில் ஒரு சர்வஜன வாக்கெடுப்பிற்கு தயாராக வேண்டும் என்றார்.
அத்துடன் இதற்காக அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளிடம் பகிரங்கமாக வேண்டுகோள் விடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.