வெளிவிவகார அமைச்சின் கீழ் சர்வதேச ஒத்துழைப்புக்களுக்கென தனியான பிரிவொன்றை அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தனவினால் இது தொடர்பாக முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவையின் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆசியாவை மையமாகக் கொண்டு வளர்ந்து வரும் பொருளாதாரப் பின்னணிக்கு ஏற்ப உலகளாவிய பொருளாதார மற்றும் அரசியல் சூழல் மாற்றமடைந்து வரும் வேளையில் வலுவான பொருளாதார இராஜதந்திர அணுகுமுறைகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே இந்த பிரிவை அமைக்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இந்த பிரிவின் ஊடாக அனைத்து நிறுவனங்களின் நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பு செய்தல், பொருளாதார இராஜதந்திர விடயங்களுக்கு ஏற்புடைய கொள்கைகளை வகுத்தல் ஆகிய பணிகள் முன்னெடுக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.