November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

காணி சுவீகரிப்புக்கு எதிராக யாழ். வேலனை மக்கள் போராட்டம்

பொதுமக்களின் காணிகளை சுவீகரிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் காணி சுவீகரிப்பு செயற்பாடுகளை நிறுத்த கோரியும் யாழ்ப்பாணத்தில் வேலனை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வேலணை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட மண்கும்பான் பிரதேசத்தில் 11 பேருக்கு சொந்தமான 5 ஏக்கர் காணியை கடற்படையின் தேவைக்காக சுவீகரிக்கும் நோக்கில் நில அளவைத் திணைக்களத்தினால் அளவீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காணி உரிமையாளர்களும் பிரதேச மக்களும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் இணைந்து போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர். ஆயினும் இன்றைய தினம் காணி அளவீட்டு திணைக்கள அதிகாரிகள் காணி அளவிடுவதற்கு அங்கு வருகை தரவில்லை .

ஆனபோதும் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை மீண்டும் மக்களிடமே வழங்க கோரியும் வேலணைப் பிரதேச செயலகத்திற்கு பேரணியாகச் சென்ற மக்கள் பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து அங்கு பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டு பிரதேச செயலகத்துக்குள் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் உள் நுழைவதற்கு தடை விதித்திருந்தனர்.

இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், மக்களின் காணிகளை சுவீகரிப்பதை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி பிரதேச செயலாளரிடம் மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர்.

இவ்வேளையில் அங்கிருந்தவர்களிடம் தெரிவித்த பிரதேச செயலாளர் சோதிநாதன், இந்தக் காணிகளை சுவீகரிக்க முயற்சி முன்னெடுக்கப்பட்டாலும் அதில் மக்களுக்கு விருப்பமின்மை அல்லது மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதால் அதனை தாம் தற்காலிகமாக இடை நிறுத்துவதாகவும் இது தொடர்பில் காணி அமைச்சு தெரியப்படுத்தி அதன்பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானிக்க முடியும் என்றும் தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

This slideshow requires JavaScript.