January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னத்தை மீளமைக்க நிதியுதவி வழங்குமாறு கோரிக்கை

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் இடித்தழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் சின்னத்தை மீண்டும் அனைவரது பங்களிப்புடனும் மீளமைப்பதற்கு நிதியுதவி வழங்குமாறு யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.

இன்றைய தினம் யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் எம். பாலேந்திரா இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து கடந்த 8 ஆம் திகதி இடித்தழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னத்தை மீளமைப்பதற்கு அனுமதி வழக்கப்பட்டு, அடிக்கல் நடப்பட்டுள்ளது.

இதற்கான நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும், குறித்த நினைவுச் சின்னத்தின் நிர்மாணப் பணியை சமூகமயப்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், அனைவரும் ஆதரவு வழங்க முன்வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதற்காக யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் வங்கிக் கணக்குக்கு நிதியை அனுப்பி வைக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மாணவர் ஒன்றியத்தின் தலைமையில் நிர்மாணப் பணிகள் இடம்பெறுவதாகவும், அனைவருடைய ஆதரவையும் தாம் வேண்டி நிற்கின்றதாகவும் மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இதேநேரம், யாழ். பல்கலை வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னத்துக்குப் பதிலாக சமாதானச் சின்னம் அமைக்கப்படுமா என்று ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

குறித்த விடயத்துக்கு மறுப்புத் தெரிவித்த மாணவர் ஒன்றியத்தின் செயலாளர், அங்கு முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னமே மீளமைக்கப்படவுள்ளதாகவும், சின்னத்தில் மேலதிக கலை அம்சங்கள் இணைக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.