November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தேங்காய்க்கான விலை நிர்ணய வர்த்தமானியை இரத்து செய்ய நுகர்வோர் விவகார அதிகார சபை யோசனை!

தேங்காய்க்கான விலையைச் சுற்றளவுக்கு ஏற்ப நிர்ணயம் செய்வது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை இரத்து செய்வதற்கான முன்மொழிவொன்றை நுகர்வோர் விவகார அதிகார சபை, வாழ்க்கை செலவுக் குழுவிற்கு முன்வைத்துள்ளது.

சந்தையில் தேங்காய்க்கான விலை கட்டுப்பாடில்லாமல் உயர்ந்து வரும் பின்னணியில் தேங்காயின் எடைக்கு ஏற்ப விற்பனை செய்ய சில வர்த்தகர்கள் எடுத்துள்ள நடவடிக்கை காரணமாக நுகர்வோர் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாக அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.

இதன் காரணமாக இவ் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் கிலோ கிராம் அடிப்படையில் தேங்காய்களை விற்பனை செய்வது பொருத்தமானது என்றும் அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

தேங்காயின் சுற்றளவுக்கு ஏற்ப விலையை நிர்ணயிப்பதுபொருத்தமற்ற தாக்கியுள்ள நிலையில் இம் முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனினும் கிலோ கிராமில் தேங்காய்களை விற்பனை செய்வதற்கான நிர்ணய விலை குறித்து முடிவுகள் எதுவும் வெளியிடப்படவில்லை.

அத்தோடு நாட்டின் தேங்காய்க்கான தேவையைப் பூர்த்தி செய்யத் தேவையான தேங்காய் இல்லை என்றும் நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பரில் தேங்காயின் விலை உயர்வடைந்த நிலையில் ​​நுகர்வோர் விவகார அதிகார சபை தேங்காயின் சுற்றளவு அடிப்படையில் அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்க நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.