
இலங்கையின் புலம்பெயர் தொழிலாளர்களிடமிருந்து பெரும் தொகைப் பணத்தைக் கேட்காமல், நாடு திரும்ப வாய்ப்பளிக்கப்பட வேண்டும் தொழிலாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கொழும்பு, பத்தரமுல்லையில் அமைந்துள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைமை அலுவலகத்திற்கு முன்னால் முற்போக்கான பெண்கள் ஒன்றியம் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்திலேயே, இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கொவிட்- 19 தொற்றுநோய்ப் பரவல் தொழிலாளர்கள் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், அதிகரித்த விமான கட்டணங்களுக்கு பணம் செலுத்த முடியாமல் அவதிப்படுவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் ஈடுபட்டுள்ள 60 ஆயிரத்துக்கும் அதிகமானோர் நாடு திரும்பியுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
நாடு திரும்பியவர்களில் எத்தனை பேருக்கு விமானக் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டுள்ளது என்பதை தாம் அறிந்துகொள்ள விரும்புகின்றதாகவும், நாடு திரும்புவதற்கு பணம் செலுத்தக் கூடியவர்களுக்கே அரசாங்கம் முன்னுரிமை அளிக்கின்றதாகவும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய சுட்டிக்காட்டியுள்ளார்.