மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதியர்கள் கொரானாவினால் பாதிக்கப்படும் போது அவர்களை பராமரிப்பதற்கு வைத்தியசாலையில் ஒரு இடத்தை ஒதுக்கி தருமாறு கோரி இன்று தாதியர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தை பொது ஜக்கிய தாதியர் சங்கம் மற்றும் அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கம் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.
மட்டக்களப்பு வைத்தியசாலை நிர்வாக கட்டடத்திற்கு முன்பாக ஒன்றுகூடிய தாதியர்கள், நிர்வாகம் ஏன் இந்த அசமந்தம், தாதியர் உத்தியோகத்தர்களை பாதுகாப்பை உறுதிப்படுத்து, போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு இந்தப் போராட்டத்தினை முன்னெடுத்தனர்.
இதன்போது 30 மேற்பட்ட தாதி உத்தியோகத்தர்கள் இந்த வைத்தியசாலையில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்ட தாதியர் சங்கத்தலைவர் பி. புஸ்பராசா சுட்டிக்காட்டினார்.
வைத்தியசாலையில் தாதியர் ஒருவர் கொரோனா நோயாளியாக இனங்காணப்பட்ட நிலையில், அவர் சிகிச்சைக்காக காத்தான்குடி வைத்தியசாலையிலுள்ள தாதியர்களுக்கான சிகிச்சைப் பிரிவிற்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
இதன்போது அவரை அனுமதிப்பதற்கு காத்தான்குடி வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் மறுப்பு தெரிவித்ததன் காரணமாக அவர் பெரியகல்லாறு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தார்.
இவ்வாறான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுமிடத்து அவர்களை வைத்தியசாலையிலேயே ஒரு இடத்தினை ஒதுக்கி சிகிச்சை வழங்குமாறு வலியுறுத்தியே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.