இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்தவிற்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் அவருடன் நெருக்கமான தொடர்பை பேணிய ஜனாதிபதியை ஏன் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படவில்லை என எதிர்க்கட்சி உறுப்பினர் ஹேஷா விதானகே கேள்வி எழுப்பினார்.
இன்றைய தினம் பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இந்தக்கேள்வியை முன்வைத்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்தவும் டயர் தொழிற்சாலையொன்றின் திறப்புவிழாவில் கலந்துகொண்டிருந்தனர்.
எனினும் அமைச்சர் பியல் நிஷாந்தவிற்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அப்படியென்றால் ஜனாதிபதியை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த அவசியமில்லையா என எதிர்க்கட்சி உறுப்பினர் கேட்டார்.
இதேவேளை எமது ஆட்சி காலத்தில் விளையாட்டு டயர் நிறுவனம் ஒன்றை நாம் ஆரம்பித்துள்ளதாக விமர்சித்தவர்கள் தான் தற்போது அதே டயர் நிறுவனத்தை ஆரம்பித்து வைத்துள்ளனர்.
எனவே இப்போதைய அரசாங்கம் எதிர்கட்சியாக இருந்த காலத்தில் முன்வைத்த விமர்சனங்கள் அனைத்தும் பொய்யானதெனவும் அவர் குறிப்பிட்டார்.