இலங்கையின் கிழக்கு மாகாணம் வாழைச்சேனை கமநல சேவை திணைக்களத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வெள்ளம் காரணமாக 3,850 ஏக்கர் விவசாய செய்கை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சாராவெளிகட்டு, சுரிபோட்டான் வடிச்சல்கட்டு, கல்கேணி பாலம் இரண்டு பக்கம் வண்ட், கனையான் குழிக்கட்டு, ஒட்டுவெளி, பொருக்கண்ட குளம் ஆத்துக்கட்டு, பாம் வீதி பாலம், காரையடிப்பட்டிக்கட்டு, களுவாமடுக்கட்டு உள்ளிட்ட 14 விவசாய அணைக்கட்டுக்கள் உடைக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை கமநல சேவை திணைக்களத்தின் பிரதேச உத்தியோகத்தர் ரசீட் தெரிவித்துள்ளார்.
இதனால் வரம்பிலுள்ள மணல்கள் முழுவதும் வேளான்மையை மூடிக் காணப்படுகின்றதாகவும், இதன் காரணத்தால் தங்களது விவசாய செய்கையை கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
அத்தோடு கபில நிற தட்டு எனும் நோய்த் தாக்கம் காரணமாக சில வேளான்மைச் செய்கை பாதிக்கப்பட்டு காணப்படுகின்றதாகவும் விவசாயிகள் சுட்டிக்காட்டினர்
இந்த பாதிப்புகள் காரணமாக இந்த முறை எதிர்பார்க்கப்படும் விளைச்சல் கிடைக்காது என்றும், குறைந்த பொருளாதாரத்திற்கு மத்தியில் விவசாய செய்கையில் ஈடுபட்ட நிலையில் பல சிரமங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதேவேளை,பெரும்போக செய்கையின் மூலம் தொடர்ச்சியாக கிழக்கு மாகாண விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.