ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற ஆசனம் வெற்றிடமாகியுள்ளது என சட்ட மா அதிபர் தப்புல லிவேரா பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு அறிவித்துள்ளார்.
ரஞ்சன் ராமநாயக்க நீதிமன்றை அவமரியாதை செய்த குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் அவரது நாடாளுமன்ற ஆசனம் வெற்றிடமாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இதன்படி, ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்புரிமை ரத்தாகின்றது என்பதனை சட்ட மா அதிபர் திணைக்களம் நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு அறிவித்துள்ளது.
இதேவேளை, ரஞ்சன் ராமநாயக்க நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பதற்கு அனுமதி வழங்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுக்க உள்ளதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மரண தண்டனை விதிக்கப்பட்ட ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்க அனுமதி வழங்கப்படலாம் என்றால் ரஞ்சனுக்கும் சிறையிலிருந்து அமர்வுகளில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த வாரம் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு உச்ச நீதிமன்றம் நான்கு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.