July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘சுகாதார அமைச்சர் பவித்ரா உடன் பதவி விலக வேண்டும்’

கொரோனாத் தொற்றால் உயிரிழப்பவர்கள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்பியபோது உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலில் இறந்தவர்களில் குறைந்தளவானோரே கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர் என்று அரசு பதிலளித்தது.

ஆனால், தற்போது கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 260 ஐக் கடந்துள்ளதால் சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி உடனே பதவி விலக வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“உதயங்க வீரதுங்கவால் நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட உக்ரேன் கொத்தணி தற்போது தலதா மாளிகையிலும் புகுந்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலின்போது சுமார் 260 பேர் உயிரிழந்தனர். ஆனால், தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் 260 இற்கும் அதிகமான தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளனர். இதற்கு அரசு வெட்கப்பட வேண்டும்.

இது தொடர்பில் நாம் நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்பியபோது உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலில் உயிரிழந்ததைவிட கொரோனாத் தொற்றால் மக்கள் உயிரிழக்கவில்லை என்று பதிலளித்தார்கள்.

ஆனால், தற்போது உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலால் உயிரிழந்தவர்களை விட அதிகமானோர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இவ்வாறான நிலைமை ஏற்பட்டுள்ள நிலையில் சுகாதார அமைச்சர் உடனே பதவி விலக வேண்டும்.

காலி போன்ற பிரதேசங்களில் இனங்காணப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கை அரசால் வெளியிடப்படும் எண்ணிக்கையிலிருந்து மாறுபடுவதை நாம் மதிப்பீட்டின் மூலம் கண்டறிந்துள்ளோம்.

அபாயம் குறைவு என்று மக்களுக்கு காண்பிப்பதற்காக எண்ணிக்கையைக் குறைவாகக் கூறி மக்களை மேலும் அச்சுறுத்தல் மிக்க நிலைக்குத் தள்ள வேண்டாம் என்று அரசிடம் கோருகின்றோம்.

நல்லாட்சி அரசின்போது இடம்பெற்ற மத்திய வங்கி பிணைமுறி பற்றிப் பெரிதாகப் பேசப்பட்டது. ஆனால், அதனை விடவும் பாரிய மோசடி சீனி வரி குறைப்பின் மூலம் இடம்பெற்றுள்ளது.

கொரோனாத் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள பணம் போதாது எனக் கூறுபவர்கள் டெலிகொம் நிறுவனத்தின் சின்னத்தை மாற்றுவதற்கு 2 பில்லியன் ரூபா செலவிட்டுள்ளனர். தற்போதுள்ள நிலைமையில் இது அநாவசியமானதாகும். எனவே, இவ்வாறான வீண் செலவுகளைத் தவிர்த்து தடுப்பூசி பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.