July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ். மண்டைதீவு பகுதியில் காணி அளவீட்டுக்கு வந்த அதிகாரிகளுக்கு எதிரான போராட்டத்தால் பதற்றம்

யாழ்ப்பாணம் மண்டைதீவு பகுதியில் பொதுமக்களின் காணிகளை சுவிகரிப்பதற்கு எதிராக பாரிய போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்தப் போராட்டத்தால் அங்கு பெரும் பதற்றமும் ஏற்பட்டிருந்தது.

மண்டைதீவு ஜே 107 கிராமசேவகர் பிரிவிற்கு உட்பட்ட 29 பேரின் 18 ஏக்கர் பரப்பு காணி சுவிகரிப்பதற்காக நில அளவைத் திணைக்களத்தினரால் காணி அளவீடு செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து காணி அளவீடு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து காணி உரிமையாளர்களும் பொது மக்களும் அரசியல்வாதிகளும் அங்கு திரண்டிருந்தனர்.

இதன்போது அங்கு வந்த காணி அளவைத் திணைக்கள அதிகாரிகள் காணிகளை அளவீடு செய்யாமலே திரும்பிச் சென்றிருந்தனர்.

இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களும் செல்ல தயாரான நிலையில் பொலிஸ் பாதுகாப்புடன் நில அளவை திணைக்கள அதிகாரிகள் மீண்டும் அங்கு வந்து காணிகளை அளவீடு செய்யப் போவதாக அறிவித்தனர்.

ஆயினும் காணிகளை அளவீடு செய்ய அனுமதிக்க முடியாதென்று எதிர்ப்பு தெரிவித்து பொது மக்களும் அரசியல் பிரமுகர்களும் காணிகளின் உரிமையாளர்களும் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதன் பின்னர் அங்கு வருகை தந்த வேலனை பிரதேச செயலளர் சோதிநாதன் இங்குள்ளவர்களின் எதிர்ப்பு காரணமாக காணி அளவிடுவதை நிறுத்துவதாகவும் காணி அமைச்சுடன் இது குறித்து பேசி அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் அதுவரையில் காணி அளவீடு மேற்கொள்ளபடாதென்றும் தெரிவித்தார்.

இதனையடுத்து நில அளவை திணைக்களதினரும் பொலிஸாரும் திரும்பி சென்றனர். இதன் பின் அங்கு நின்றிருந்த மக்களும் அரசியல் வாதிகளும் சென்றிருந்நமை குறிப்பிடதக்கது.

இந்தப் போராட்டத்தில் காணி உரிமையாளர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள் உறுப்பினர்கள் பிரதேச மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

இதேவேளை தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, ஈழமக்கள் ஜனநாயக கட்சி ஆகிய 4 தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளும் ஒன்றாக இணைந்து எதிர்ப்பு போராட்ட நடவடிக்கையில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.