photo credits: Kumanan
முல்லைத்தீவு, குருந்தூர் மலையில் இருந்த ஆதி ஐயனார் சூலம் பிடுங்கப்பட்டு, அதே இடத்தில் புத்தர் சிலையொன்றுக்கு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு, தொல்பொருள் ஆய்வுப் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.
இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க இன்று தொல்பொருள் ஆய்வுப் பணிகளை ஆரம்பித்து வைத்துள்ளார்.
இன்று காலை குருந்தூர் மலைப் பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் இராஜாங்க அமைச்சருடன், தொல்பொருள் திணைக்களத்தின் செயலாளர், விரிவுரையாளர் அருண மனதுங்க, முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் க.விமலநாதன், முல்லைத்தீவு மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ரத்நாயக்க, தொல்பொருள் திணைக்கள மற்றும் படை அதிகாரிகளும் கலந்துகொண்டுள்ளனர்.
தமிழ் மக்கள் பாரம்பரியமாக வழிபட்டு வந்த குருந்தூர் மலையில் பௌத்த தேரர்களால் விகாரை அமைக்க முயற்சித்தபோதும், அதற்கு முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருந்தது.
இதனையடுத்து, அவர்கள் தமது தொல்பொருள் இடமாக அதை நிறுவி, பௌத்த விகாரை அமைக்கும் நோக்குடன் அகழ்வாராய்ச்சி நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக பிரதேச மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
நேற்று அந்தப் பகுதிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சென்றபோது, ஊடகவியலாளர்கள் உள்நுழைய அனுமதிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.