July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜனாதிபதியின் கீழ் இருந்த புத்தசாசன அமைச்சு பிரதமரின் கீழ் கொண்டுவரப்பட்டமைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனு

இலங்கை ஜனாதிபதியின் கீழ் இருந்த புத்தசாசன அமைச்சு, பிரதமரின் கீழ் கொண்டுவரப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதா என்பது தொடர்பாக இன்று உயர்நீதிமன்றத்தில் ஆராயப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்ற நீதியரசர்களான எல்.டி.பீ. தெஹிதெனிய மற்றும் எஸ். துரைராஜா ஆகியோரை உள்ளடக்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனு ஆராயப்பட்டுள்ளது.

இலங்கை ஜனாதிபதியின் கீழ் இருந்த புத்தசாசன அமைச்சு, பிரதமரின் கீழ் கொண்டுவரப்பட்டமைக்கு எதிராக சட்டத்தரணி அருண லக்சிறி குறித்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

இதேநேரம், மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் நிராகரிக்குமாறு சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் நெரின் புள்ளே கேட்டுக்கொண்டுள்ளார்.

அத்தோடு, இலங்கை அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் தற்போது அமுலில் இல்லாததால், குறித்த மனுவை விசாரணைக்கு உட்படுத்த முடியாதென்பதையும் பிரதி சொலிசிட்டர் சுட்டிக்காட்டியுள்ளார்.

19 ஆவது திருத்தம் அமுலில் இல்லாவிட்டாலும், குறித்த மனுவை விசாரணைக்கு உட்படுத்தலாம் என்றும் ஜனாதிபதியின் கீழ் இருந்த புத்தசாசன அமைச்சு, பிரதமரின் கீழ் கொண்டுவரப்பட்டமை அரசியலமைப்புக்கு முரணானது என்றும் மனுதாரர்கள் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதா என்பது குறித்து எதிர்வரும் ஜூலை மாதம் 9 ஆம் திகதி ஆராயப்படவுள்ளது.